விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் தாலுகா அலுவலகத்திற்கு முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு 100 நாள் திட்ட வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாய தொழிற்சங்க தாலுகா குழு தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்டத் தலைவர் கலையரசன், தாலுகா பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா குழு செயலாளர் முருகன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் சங்கர் பேசும்போது, முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ள நிலையில் எந்த ஒரு தொழிற்சாலைகளும் இல்லாத நிலையிலும், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாக இருப்பதாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாக இருப்பதாலும் அடிப்படை வசதிக்கே கஷ்டப்படும் சூழலில் பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றார்.. இதைத்தொடர்ந்து மாநிலச் செயலாளர் சங்கர் தலைமையில் முதுகுளத்தூர் துணை தாசில்தார் அய்யாதுரை மற்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி பணியாளர் ஆகியோரிடம் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. இதில் விவசாய தொழிற்சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.