சாலைப்பணிக்காக பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சாலைப்பணிக்காக பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

சாலைப்பணிக்காக பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி தாலுகா ராதாபுரம் கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் தனியார் அறக்கட்டளை அமைப்பு மற்றும் சமூகஆர்வலர்கள் கூட்டமைப்பினர் இணைந்து அங்குள்ள ஏரிக்கரை பகுதிகளில் பனங்கன்றுகளை நட்டனர்.

அந்த பனங்கன்றுகள் நன்கு மரமாக வளர்ந்திருந்த நிலையில் அங்குள்ள ஏரிக்கரையின் மேல்பகுதியில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 15.9.2023 அன்று எந்தவித இடையூறும் இல்லாத 200-க்கும் மேற்பட்ட வளர்ந்த பனங்கன்றுகளை பொக்லைன் எந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி அகற்றியுள்ளனர். இதுசம்பந்தமாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் சமூகஆர்வலர்கள் புகார் மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த பனங்கன்றுகளை அகற்றிய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு சமூகநல ஆர்வலர்கள் கூட்டமைப்பினர், அகற்றப்பட்ட பனை மரங்களில் இருந்த பனை ஓலைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். லட்சுமணன், நான்குகோடி மரம் வளர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், கரிகால சோழன் பசுமை மீட்புப்படை சமூக ஆர்வலர் அகிலன், தமிழ்நாடு பனை ஏரிகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், பசுமை சோலை இயக்க பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கரிகால சோழன் பசுமை மீட்பு படை ரமேஷ், மனிதம் காப்போம் குழு சந்துரு, யாதும் ஊரே யாவரும் கேளீர் பொது நலச்சங்க துரைசீனிவாசன், ஆலம் விழுதுகள் அமைப்பு சூரியபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story