மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின் கட்டண உயர்வை கண்டித்து  கிருஷ்ணகிரியில்  அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று பேசினார்.

கிருஷ்ணகிரி

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அந்த வகையில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார்.

மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது

தற்போது நடந்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசு 15 மாதங்களில் எந்தவித திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக இருக்கிற திட்டங்களையும் இந்த ஆட்சி நிறுத்தி வைத்திருக்கிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், ஏழை கிராம மக்கள் நலனுக்காக ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் ஆகியவற்றை இந்த அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அதே போல் கிராமப்புற மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட மினி கிளினிக் திட்டத்தையும் நிறுத்தி விட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எந்த சூழ்நிலையிலும் மின் கட்டணத்தை உயர்த்தாமல் அதே நிலையில் இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் மீது சுமையை ஏற்றியுள்ளனர்.

எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, ஒன்றிய குழு தலைவர்கள் அம்சா ராஜன், பையூர் ரவி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் வி.கே.சண்முகம், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story