மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலத்தில் மின்சார வாரியத்தில் தனியார்மயத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் புதுச்சேரி மாநில மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஐக்கிய சங்க மண்டல செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில செயலாளர் சிவச்செல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராஜ், ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து சங்கம் மற்றும் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கி பேசினார். சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.