கொருக்குப்பேட்டையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொருக்குப்பேட்டையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னை கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர்.
இதையறிந்த ஆர்.கே.நகர் மற்றும் கொருக்குப்பேட்டை போலீசார் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையில் அங்கு குவிக்கப்பட்டனர். ரெயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரெயில் நிலையம் உள்ளே கொருக்குப்பேட்டை ெரயில்வே போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாநில கவுரவ தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.கே.மகேந்திரன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்கள் சரவணன், தமிழன், மாதர் சங்க முன்னாள் பகுதி செயலாளர் விமலா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கையில் கொடி மற்றும் பதாகையுடன் ரெயில் மறியலில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கேயே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.