வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வினை வழங்க மறுப்பதை கண்டித்தும், கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு, அரசால் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், மாவட்ட நிர்வாகத்தில் பணி நியமன ஆணை வழங்க நீண்ட கால தாமதம் செய்வதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வைரவன் தலைமை தாங்கினார். தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய செயற்குழு உறுப்பினர் பரணிதரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விராலிமலை

விராலிமலை தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் விராலிமலை வட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அடிப்படை உரிமையாளர்களின் பதவி உயர்வினை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விராலிமலை வட்டார தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சேகர், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி

இதேபோல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சாலை மணி தலைமை தாங்கினார். ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு அரசால் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், மாவட்ட நிர்வாகத்தில் பணி நியமன ஆணை வழங்க நீண்ட கால தாமதம் செய்வதை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ரவி நன்றி கூறினார்.


Next Story