மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்


மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
x

கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவையின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

விசுவ இந்து பரிஷத் (தமிழ்நாடு), அருள்வாக்கு அருள்வோர் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை நிர்வாகிகள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:-

கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், நல்ல வருமானம் இருந்தும் பூசாரிகளின் வாழ்வாதாரத்துக்கேற்ப சம்பளம் தர இந்து சமய அறநிலையத்துறை முன்வருவது கிடையாது. எனவே கிராம கோவில் பூசாரிகளின் வாழ்க்கையை கருதி, அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும்.

அதேபோல முடங்கி கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியமும், பூசாரிகள் மறைவுக்கு பிறகு அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.

இந்த நியாயமான கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும். நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே, பூசாரிகளின் வாழ்வாதாரத்தை கருதி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உரிய அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க தங்கள் கோரிக்கைகளை நூதனமான முறையில் வெளிப்படுத்தினர்.


Next Story