மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சிறுபான்மை கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சிறுபான்மை கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கருங்கல்:
மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்தும், அங்கு அமைதியை ஏற்படுத்த கோரியும் மாத்திரவிளை வட்டார அரசியல் பிரிவு மற்றும் சிறுபான்மை அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கருங்கலில் நடந்தது. மாத்திரவிளை வட்டார அரசியல் குழுவைச் சார்ந்த ததேயு பிரேம்குமார் தலைமை தாங்கினார். பேரணியை கருங்கல் கருமாவிளை சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பேரணியானது அங்கிருந்து புறப்பட்டு ராஜீவ் காந்தி சந்திப்பு, பஸ் நிலையம் வழியாக தபால் நிலைய சந்திப்பு வந்து சேர்ந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தை மாத்திரவிளை மறைவட்ட முதல்வர் அருட்பணியாளர் மரிய வின்சென்ட் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பால பிரஜாபதி அடிகளார், சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரி தாளாளர் ஆண்டனி ஜோஸ், குமரி மாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பைச் சேர்ந்த அருட்பணியாளர் ஞானதாசன், பொதுச்செயலாளர் மீரா மைதீன், மாத்திரவிளை வட்டார அரசியல் குழுவை சேர்ந்த ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள மத இன மொழி பண்பாட்டு உரிமைகளை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை உடனே மத்திய அரசு நிறுத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் எரித்து, இடிக்கப்பட்ட மத வழிபாட்டு தலங்கள், வீடுகள், கல்வி நிலையங்களை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி குளச்சல் போலீஸ் துைண சூப்பிரண்டு தங்கராமன், கருங்கல் இன்ஸ்பெக்டர் இசக்கி துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.