காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்
திருமானூர், தா.பழூரில் கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. இதில் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையடைப்பு
காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வணிக சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து அரியலூர் மாவட்டம் திருமானூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர அளவு நீரை கர்நாடக அரசு முறையாக திறக்காததால் பல ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா அரசை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கர்நாடகத்தில் போராட்டத்தை தூண்டி வரும் பா.ஜ.க. அரசு மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும் இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதையொட்டி நேற்று காலை முதலே திருமானூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் ேநற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து திருமானூர் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்கள் திருமானூர் பஸ் நிலையம் முன்பு அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருமானூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை
இதேபோல் தா.பழூர் பகுதி காவிரி டெல்டா பகுதியாக அமைந்துள்ள நிலையில் சம்பா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடகாவில் இருந்து காவிரி நதிநீர் தமிழக விவசாயத்திற்கு போதுமான அளவு திறக்கப்படாததை கண்டித்து காவிரி டெல்டா பாசன பகுதியில் நேற்று கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அரியலூர் மாவட்ட காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தா.பழூர் நகரின் ஒரு சில கடைகள் ஆதரவளித்து கடை பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் பெட்டிக்கடைகள், டீக்கடைகள், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், ஹார்டுவேர் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள் ஆகியவை பரவலாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. விவசாய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய விதை பண்ணைகள், உரக்கடைகள், பூச்சி மருந்து கடைகள் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டிருந்தது. தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி, சிலால், கோடாலி கருப்பூர், உதயநத்தம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம்போல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.