நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல்' வைப்பு


நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல் வைப்பு
x

அறந்தாங்கியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை

நிதி நிறுவனம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டியில் என்.கே.பி. நிதி நிறுவனம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படும் என்றும், அதற்கு முன்தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி அறிவித்து இருந்தது. மேலும் இதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன், 20 ரூபாய் பத்திரமும் சேர்த்து கொடுக்க வேண்டும். முதல் தவணையாக ரூ.1 லட்சத்திற்கு ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும் என்று நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ரூ.20 லட்சம் வரை...

இதனை நம்பிய பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு தேவைப்படுகின்ற கடன் தொகைக்கு ஏற்றவாறு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை முதல் தவணையாக செலுத்தியுள்ளனர். மொத்தம் ரூ.20 லட்சம் வரை செலுத்தி உள்ளனர். மேலும் பணம் செலுத்தியவருக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் யாருக்குமே பணம் அவா்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என வங்கியின் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் நிதிநிறுவன அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டனர். அதற்கு நிர்வாகம் சார்பில் முறையான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நிதிநிறுவனம் பூட்டி சீல் வைப்பு

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிர்மல் குமார் (வயது 45) என்பவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இதே போன்று நிறுவனங்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து நிதி நிறுவன அலுவலகத்தை போலீசார் பூட்டி சீல் வைத்தனர். அறந்தாங்கியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story