லஞ்ச வழக்கில் கைதான தேவியாக்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்
லஞ்ச வழக்கில் கைதான தேவியாக்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தலைவாசல்
லஞ்ச வழக்கில் கைது
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி ஊராட்சி தலைவர் அமுதா. இவருடைய கணவர் ஜெயக்குமார், தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முதல் நிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். தேவியாக்குறிச்சி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் சின்னசாமி (44).
அதே ஊராட்சியில் திட்டப்பணிக்கு ஒப்பந்தம் எடுத்த காண்டிராக்டர் செந்தில்குமார் ரூ.44½ லட்சத்தில் பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் ஒப்பந்த பணிக்காக 13 சதவீதம் கமிஷனாக ரூ.55 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் ஊராட்சி செயலாளர் சின்னசாமி கேட்டு உள்ளார்.
இது குறித்து செந்தில்குமார் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச பணத்தை ஊராட்சி செயலாளர் சின்னசாமியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பணி இடைநீக்கம்
மேலும் பணத்தை வாங்குவதற்கு முன்பு ஊராட்சி தலைவரின் கணவர் ஜெயக்குமார் கூறியதன் பேரிலேயே சின்னசாமி லஞ்ச பணத்தை வாங்கி உள்ளார். இது தொடர்பாக ஊராட்சி தலைவரின் கணவர் ஜெயக்குமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
லஞ்ச வழக்கில் கைதான 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிபாரிசு செய்துள்ளனர். அதன்பேரில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் (வளர்ச்சி பணிகள்) உத்தரவின் பேரில், தேவியாக்குறிச்சி ஊராட்சி செயலாளர் சின்னசாமி பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளார்.