கோடை விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்


கோடை விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ராமேஸ்வரம்,

புண்ணியத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்நிலையில், கோடைகால விடுமுறையின் கடைசி நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடவும் சாமியை தரிசனம் செய்யவும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.

தொடர்ந்து கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்களும் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.


Next Story