தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்


தொடர் விடுமுறை காரணமாக தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள் கட்டிட கலையை பார்த்து மெய்சிலிர்த்தனர்.

தஞ்சாவூர்

பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் கட்டிட கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலக பொறியியல் வல்லுனர்கள் பார்த்து வியக்கிறார்கள். தமிழர்களின் கட்டிட கலைத்திறனுக்கு சான்றாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரமாண்டமான தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது.

உலக பாரம்பரிய சின்னமான பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகிஅம்மன், வராகிஅம்மன், விநாயகர், முருகன், நடராஜர், சண்டீகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி என பல்வேறு சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமானோர் வந்து சென்றனர். மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்று வந்தனர். இதனால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

மெய்சிலிர்த்தனர்

கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பெரியகோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரியநந்தி உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர். மேலும் கோவிலின் கட்டிட கலைகளையும், சிற்பங்களையும் பார்த்து மெய்சிலித்தனர். இவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story