திருத்தணி முருகன் கோவில் ஆடிபரணி விழாவில் குவிந்த பக்தர்கள்


திருத்தணி முருகன் கோவில் ஆடிபரணி விழாவில் குவிந்த பக்தர்கள்
x

திருத்தணி முருகன் கோவில் ஆடிபரணி விழாவில் பக்தர்கள் குவிந்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிக்கிருத்திகை விழா நடைப்பெறவில்லை.

இந்தாண்டிற்கான ஆடிக்கிருத்திகை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. மேலும், நேற்று ஆடிப்பரணி என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்காக பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல் திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில் புனித நீராடினர். பின்னர் மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன் கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர்.

அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பொது வழியில், பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, மலைக்கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால், அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வருகை புரியும் பக்தர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க 7094400102, 7094400103 மற்றும் 7094400108 ஆகிய தொலைபேசி எண்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயப்பரியா, துணை ஆணையர் விஜயா ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story