சேலம் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை தொழிலாளி கைது


சேலம் அருகே  தாபா ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை  தொழிலாளி கைது
x

சேலம் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி,

ஓட்டல் உரிமையாளர்

சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவருடைய மகன் நாகராஜன் (31). இவர் கொண்டலாம்பட்டி அருகே தாபா ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சீரகாபாடி பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த தாபா ஓட்டலை வாடகைக்கு எடுத்து நடத்த கந்தசாமியும், மகன் நாகராஜனும் முடிவு செய்து அதை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

மராமத்து பணி

அந்த இடத்தில் கடந்த 10 நாட்களாக மராமத்து பணிகளை நாகராஜன் மேற்கொண்டு வந்துள்ளார். இதனை தந்தை கந்தசாமி மேற்பார்வை செய்து வந்துள்ளார். மராமத்து பணியில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதில் கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோசப் (30) என்பவரும் தாபா ஓட்டலில் தங்கி வேலை செய்துள்ளார்.

தாக்குதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் நாகராஜன், தந்தை கந்தசாமியை தாபா ஓட்டலில் இறக்கிவிட்டு இரவு அங்கேயே படுத்து கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது ஜோசப்பும் அங்கு இருந்துள்ளார்.

இதையடுத்து இரவு 11 மணிக்கு ஜோசப், நாகராஜனின் பெரியப்பா மகனான ராஜாவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு, முதலாளி கந்தசாமியை யாரோ 4 மர்ம நபர்கள் தாபா ஓட்டலுக்குள் புகுந்து தாக்கி வருகின்றனர். நான் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டேன். நீங்கள் உடனடியாக தாபா ஓட்டலுக்கு வாருங்கள் என கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை

உடனே ராஜாவும், நாகராஜனும் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். அங்கு கடையில் இருந்த பிரிட்ஜ் உடைந்து கிடந்தது. மேலும் தந்தையை தேடியபோது அங்கிருந்த ஒரு மரத்தடியில் தலை மற்றும் கழுத்து பகுதியில் அடிபட்டு கந்தசாமி பிணமாக கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜன் ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலாளியை பிடித்து விசாரணை

மேலும் கந்தசாமியை யார் கொலை செய்திருப்பார்கள் என விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அப்போது சம்பவம் நடந்த போது கொலை செய்யப்பட்ட கந்தசாமியுடன் இருந்த தொழிலாளி ஜோசப் அந்த இடத்தில் இல்லாததும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததையும் கண்டு போலீசார் ஜோசப் மீது சந்தேகம் அடைந்தனர். உடனே அவரை போலீசார் தேட தொடங்கினர்.

அப்போது அருகில் இருந்த மலையில் கோவில் பகுதியில் பதுங்கி இருந்த ஜோசப்பை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கம்பியால் அடித்துக்கொலை

இதில், ஜோசப் இதற்கு முன்பு வேலை செய்த கடையில் சில பொருட்களை திருடி விற்று உள்ளார். அதே போல் இந்த ஓட்டலிலும் குளிர்சாதன பெட்டியின் மோட்டார் மற்றும் இரும்பு கம்பிகளை திருடும்போது கந்தசாமி பார்த்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு முற்றவே ஜோசப் அருகில் உள்ள கம்பியை எடுத்து கந்தசாமியின் தலை மற்றும் கழுத்தில் அடித்து உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதில் போலீசாருக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கந்தசாமியின் அண்ணன் மகன் ராஜாவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு, யாரோ கந்தசாமியை தாக்கி விட்டார்கள் எனக் கூறிவிட்டு ஜோசப் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஜோசப்பை போலீசார் கைது செய்தனர். தாபா ஓட்டல் உரிமையாளரை தொழிலாளி கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஜோசப்பை கைது செய்திட வேகமாக செயல்பட்ட ஆட்டையாம்பட்டி போலீசாரையும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story