எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பலி
எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பலி
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
டிரைவர்
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி பொன்னேரி கிராமத்தை சேர்ந்த நல்லிகவுண்டர் மகன் சசிகுமார் (வயது 42). இவர் சேலம் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் எருமப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவருடைய தோட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து கவனித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் சசிகுமார் தோட்டத்தில் மருந்து தெளிப்பதற்காக கிணற்று அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் எடுத்தார். அப்போது தொட்டி திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகுமார் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி சசிகுமாரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி போலீசார் சசிகுமார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சசிகுமாருக்கு, சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.