நாமக்கல் அருகே அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்புபோலீசார் விசாரணை
நாமக்கல் அருகே அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் பிணம்
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளம்பாடி ஊராட்சி சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாடு அருகே மலைக்குன்று உள்ளது. மலைக்குன்றின் பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தது வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த மாட்டு வியாபாரியாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.