கிணறு தோண்ட வெடி வைத்தபோதுகல் விழுந்து மூதாட்டி பலி
பாப்பாரப்பட்டி;
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 63). இவர் கடந்த மாதம் 24-ந் தேதி பிக்கம்பட்டி அருகே நடைபெற்ற ஊரக வேலை திட்டப்பணியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஓய்வெடுப்பதற்காக அங்கிருந்த மரத்தடி நிழலில் அமர்ந்தார்.
அந்தசமயம் அதே ஊரை சேர்ந்த துரைசாமி மகன் முருகசாமி என்பவரின் விவசாய கிணறு வெட்டும் பணி நடந்தது. இதையடுத்து பாறைக்கு வெடி வைக்கப்பட்டது. கிணறு வெட்டும் வேலையில் இருந்த தொழிலாளர்கள், அக்கம் பக்கம் இருப்பவர்கள் தொலைவாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனை கவனிக்காத லட்சுமி மரத்தடி நிழலிலேயே அமர்ந்திருந்தார். அப்போது கிணற்றில் வெடி வெடித்து பாறை சிதறியது. அதில் ஒரு கல் லட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.