தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சிதிலமடைந்து முழுவதும் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சி குப்புரெட்டிபட்டி வடக்கு மேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதிய குடிநீர் இன்றி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சந்திரன், குப்புரெட்டிபட்டி வடக்கு மேடு

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையம் வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ, பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் போன்றவை சென்று வருகின்றனர். இதனால் பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதுபோல இந்த குண்டும், குழியுமான சாலையில் வாகனங்களை இயக்கும்போது வாகனங்கள் பழுதாகிறது. எனவே பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் சேதமடைந்து சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குளித்தலை.

சாலையோர தொட்டியால் தொடரும் விபத்து

கரூர் வேலுசாமிபுரத்தில் சாலையோரம் குடிநீர் குழாய்க்கான வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால் அதனை சரிசெய்யும் வகையில் இவற்றை சுற்றி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாலும், சிலாப் கொண்டு மூடப்படாமல் உள்ளதாலும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி இந்த தொட்டியில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த தொட்டி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேலுசாமிபுரம்

வெறி நாய்களால் மக்கள் அச்சம்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளிலும் வெறி நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் மேயும் ஆடுகள், கோழிகள், மாடுகளை கடிப்பதுடன், சாலையில் செல்லும் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தோகைமலை.


Next Story