திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. வினர் மனு


திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. வினர் மனு
x
தினத்தந்தி 30 Aug 2023 9:22 AM GMT (Updated: 30 Aug 2023 10:57 AM GMT)

திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. வினர் புகார் மனு அளித்துள்ளனர்.

மதுரை,

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கடந்த 21ம் தேதி தனியார் தொலைக்காட்சியில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை கண்டித்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர் காவல்துறை ஆணையரிடம் மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திண்டுக்கல் லியோனி மேடையில் பெண்களை தரம் தாழ்ந்து இழிவாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து கொண்டு தமிழகத்தின் நவீன சிற்பியாக இருந்த அம்மாவை விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை வகுக்க கூடிய ஒருவரே ஆணாதிக்கதுடன் பெண்களை தரைகுறைவாக பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரை கைது செய்ய வேண்டும் என்று காவல் துறை ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக பாடநூல் தலைவர் பதவியில் இருந்து அவரை உடனே நீக்க வேண்டும்.

கடந்த மூன்று நாட்களாக லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தி.மு.க.வினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் பெண்களுக்கு எதிராக வார்த்தைகள் இருந்தால் போலீஸ் தானாகவே நடவடிக்கை எடுக்கலாம் என சட்டம் உள்ளது என அதையும் தெரிவித்துள்ளோம். எனவே திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story