பழங்கால எச்சங்கள் கண்டுபிடிப்பு


பழங்கால எச்சங்கள் கண்டுபிடிப்பு
x

வேப்பனப்பள்ளி அருகே பழங்கால எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி தாலுகா நாச்சிக்குப்பம் ஊராட்சி பண்ணப்பள்ளி கிராமத்தில், இரும்பு உருக்கும் உலைகள் இருந்ததற்கான எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதலாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு தொல்லியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கற்கால தொல்லியல் எச்சங்கள், வரலாற்று கால தொல்லியல் எச்சங்கள் குறித்து நேரடியாக களத்தில் கற்றுக்கொடுத்து, பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. அதன்படி பண்ணப்பள்ளியில் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் ஊருக்கு வடக்குபுறம் கிருஷ்ணப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், இரும்பு உருக்கும் ஆலைகள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இப்பகுதியில் இரும்புக்கால மக்கள் கனிம உலோகங்களை உருக்க பயன்படும் சுட்ட மண்ணிலான உருக்கு உலை குழாய்கள் சிறிதும், பெரிதுமாக ஏராளமானதாக கிடைத்துள்ளன. அத்துடன் இரும்பு உருக்கிய பிறகு அதில் இருந்து கிடைக்கும் இரும்பு கழிவுகள், இரும்பை தேவையான வடிவத்தில் கொணடுவர தேய்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கற்கள், இரும்புக் கால மக்களுக்கு தொடர்புடைய வாழ்விட பகுதி, அதில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் மற்றும் ஊர் நடுவில் உள்ள குத்துக்கல் ஆகியவை கிடைத்துள்ளன.


Next Story