மல்லசந்திரத்தில் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு


மல்லசந்திரத்தில் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லசந்திரத்தில் பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாறை ஓவியம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளி அருகே மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை ஆகும். இவைகள் அடுத்தடுத்த இரண்டு பாறை பரப்புகளில் காணப்படுகின்றன. இங்கு ஏற்கனவே 11 கல்திட்டைகளில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது இந்த பாறைகளுக்கு எதிரே உள்ள மலைப்பகுதியில் புதிய பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், பிரகாஷ் ஆகியோர் கண்டறிந்து அளித்த தகவலின்பேரில், மத்திய பல்கலைக்கல்லூரி மாணவர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, மற்றும் மாவட்ட வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து களப்பயணம் மேற்கொண்டனர்.

இலக்கிய தகவல்கள்

இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், இந்த ஓவியம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த ஓவியம் வரையப்பட்டுள்ள பாறையை ஒரு கல் திட்டையோடு ஒப்பிடும் வகையில் கூரையில் இல்லாமல் செங்குத்துக்கல்லில் வரையப்பட்டுள்ளது. இதில் நிரப்பப்பட்ட பெருக்கல்குறி போன்ற உடலமைப்புடன் ஒரு மனித உருவம் இரு கைகளையும் தூக்கி இடுப்பில் கத்தியுடன் நடந்து செல்வதாகவும் அருகில் கோட்டுருவத்தில் ஒரு மனிதன் மாட்டை பிடித்து வருவது போலவும் வரையப்பட்டுள்ளது.

பெருக்கல்குறி போன்ற உடல் அமைப்பு கொண்ட ஓவியம் ஐகுந்தம் போன்ற பிற இடங்களில் செஞ்சாந்தில் வரையப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் மாடுகளை செல்வம் என்றும், கால்நடைகளுக்காக ஏராளமான சண்டைகள் நடந்துள்ளதையும் அந்த சண்டைகளில் இறந்த வீரர்களின் நினைவாக நடுகல் எடுக்கப்பட்டதையும் பதிவு செய்துள்ளன. இத்தகைய இலக்கிய தகவல்களை பாறை ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன என்றார். இந்த களப்பயணத்தின்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சதானந்த கிருஷ்ணகுமார், பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story