ஆக்கிரமித்து வீடு கட்டியதில் தகராறு: ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு;3 பேர் கைது


ஆக்கிரமித்து வீடு கட்டியதில் தகராறு: ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு;3 பேர் கைது
x

சின்னசேலம் அருகே ஆக்கிரமித்து வீடு கட்டியதில் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

ஆக்கிரமிப்பு

சின்னசேலம் அருகே கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பொன்மணி (வயது 25). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது ஊராட்சிக்கு சொந்தமான நான்கு அடி இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்தவர்களை பொன்மணி அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் இதுகுறித்து வருவாய்த்துறைக்கு மனு கொடுத்தார். அதன்பேரில் வருவாய்த்துறையினர் வந்து அப்பகுதியை அளந்து பார்த்தபோது 4 அடி வரை பொது இடத்தை ஆக்கிரமித்து பொன்மணி வீடு கட்டி வந்தது தெரிந்தது. இதையடுத்து வீடு கட்டும் பணியை நிறுத்தினர்.

அரிவாளால் வெட்டினர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்மணி மீண்டும் அந்த இடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் சசிகுமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சிலா் பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டக்கூடாது என்று பொன்மணியிடம் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொன்மணி மற்றும் அவரது தம்பிகளான வெற்றிவேல் (23) செல்வக்குமார் (19), கண்ணன் ஆகியோர் அரிவாள், இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு சென்று, வீட்டின் முன்பகுதியில் உள்ள திண்ணையை சேதப்படுத்தினர்.

இதை தட்டிக்கேட்ட சசிகுமாரை 4 பேரும் சேர்ந்து அரிவாளால் தலையிலும், முகத்திலும் வெட்டிக்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் பொன்மணி, வெற்றிவேல், செல்வக்குமார், கண்ணன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பொன்மணி, வெற்றிவேல், செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர். கண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story