மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி


மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:46 PM GMT)

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

கலெக்டர் அலுவலகத்தில்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி கச்சிராயப்பாளையம் சாலை வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடிவடைகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதி வண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கியர் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்தக் கூடாது. ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

பதிவு செய்ய வேண்டும்

மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும். வீரர், வீராங்கனைகள் அரை மணி நேரத்திற்கு முன்பாக போட்டி தொடங்கும் இடத்திற்கு மிதிவண்டியுடன் வர வேண்டும். மிதிவண்டி போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்கு பெறும் மாணவ-மாணவிகளே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

போட்டியில் பங்குபெறும் மாணவ-மாணவிகள் நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6.10 மணிக்குள் நேரடியாக தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை 72990 05768 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம்.

பரிசு விவரம்

மேலும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரம், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரம், 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ.தூரம், மாணவிகளுக்கு 15 கி.மீ.தூரம் என 3 பிரிவுகளில் சைக்கிள் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக சான்றிதழ் மற்றும் முதல் பரிசு தலா ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு தலா ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு தலா ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக சான்றிதழ் மற்றும் தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். எனவே அனைத்துப்பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை பள்ளி வயது சான்றிதழுடன் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு போட்டி நடைபெறும் மாவட்ட கலெக்டர் அலுவக வளாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story