மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.
ஸ்கேட்டிங் போட்டி
பெரம்பலூர் மாவட்ட அளவிலான 5 வயது முதல் 17 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான 'ஸ்கேட்டிங்' போட்டி நேற்று நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்த இந்த போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேலு பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 5 வயது குழந்தைகள் முதல் 7 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், 9, 11, 14, 17 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 17 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் ரிங் 1, ரிங் 2, ரிங் 2 ஏ ஆகிய 3 பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டன.
போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட 'ஸ்கேட்டிங்' போட்டியில் முதல் இடம் பிடித்த ஸ்கேட்டிங் வீரர்-வீராங்கனைகளுக்கு தங்கப் பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கலப்பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மாநில போட்டியில் பங்கேற்பு
போட்டிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தினர் செய்திருந்தனர். முதல் 2 இடம் பிடித்தவர்கள் காஞ்சீபுரத்தில் வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.