மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி


மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 6:46 PM GMT)

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டிகள் அடுத்தமாதம் 7-ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டிகள் அடுத்தமாதம் 7-ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டுரை-பேச்சு போட்டிகள்

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டு தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

2022-23-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசுக்கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, தனியார் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி நடக்கிறது.

பரிசு-சான்றிதழ்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஒவ்வொன்றிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லூரியில் இருந்து ஒரு மாணவர் வீதம், 3 போட்டிகளுக்கு 3 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளி, கல்லூரியில் இருந்து பரிந்துரை கடிதத்துடன் வரவேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்கள் பள்ளி, கல்லூரி மூலமாக அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக மின்னஞ்சல் முகவரி tamilvalar.tvr@gmail.com அனுப்ப வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் காலை 9.35 மணி முதல் நடக்கிறது. இந்த போட்டிகள் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலும், 9578358343 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story