மாவட்ட அளவிலான கோடைகால கலை பயிற்சி முகாம்
மாவட்ட அளவிலான கோடைகால கலை பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கரூா் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளியிலும், பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் செயல்பட்டு வரும் சவகர் சிறுவர் மன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை கோடைகால கலை பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி முகாம் காலை 7 மணி முதல் 11 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலை பயிற்சி முகாமில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே ஆகிய கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் பங்கேற்பு சான்று வழங்கப்படும். இக்கலை பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது வயது சான்றிதழுடன் ேமற்கண்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வருகை தந்து பயன்பெறலாம் என திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.