அரசு விரைவு பஸ்களுக்கு தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்..!
அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு நாளை (21-ந் தேதி) முதல் தொடங்குகிறது
சென்னை,
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு நாளை (21-ந் தேதி) முதல் தொடங்குகிறது. 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய நாளை (புதன்கிழமை) முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- அரசு விரைவு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன்படி தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. பயணிகளின் முன்பதிவை பொறுத்து மேலும் 1000-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படும். விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து கழகங்களில் இருந்து பஸ்கள் பெறப்பட்டு முன்பதிவில் இணைக்கப்படும். என கூறினார்.