தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை


தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
x

தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் அலுவலகம் அமைத்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இதில் மாதம் ரூ.1,000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு மற்றும் வெள்ளி பாத்திரங்கள் வழங்குவதாகவும் மாதம் ரூ.500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தாமரைபாக்கம் சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு, குறுவாயில் உள்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பலர் இதில் சேர்ந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பணம் செலுத்தியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் அலுவலகத்தை மூடிவிட்டு மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள அலுவலகத்தின் முன்பு திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. தீபாவனி சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஜோதி மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story