விழுப்புரத்தில் தே.மு.தி.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரத்தில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இப்போது தர மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், விளைநிலங்களை அழிக்க துடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் நல்லத்தம்பி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கணபதி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தயாநிதி முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் விரோத ஆட்சி
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதற்கு மக்கள் முன்வர வேண்டும். கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. அதற்கு உறுதுணையாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இருந்தன. ஆனால் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் தர மறுக்கிறார்.
தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களுக்கு எதையும் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகன், ஆதவன்முத்து மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.