ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள் தீவிர தேர்தல் பிரசாரம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
கை சின்னம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள் தலைமையில் தி.மு.க. கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு வளையக்கார வீதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இந்த பிரசாரத்தின்போது அ.கணேசமூர்த்தி எம்.பி., காங்கிரஸ் நிர்வாகி சஞ்சய் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உற்சாக வரவேற்பு
இதேபோல் ஈரோடு முத்துவேலப்ப வீதியில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் தி.மு.க.வினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தனர். அப்போது தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெரியவலசு பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் கை சின்னத்துக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அமைச்சர்கள் பல்வேறு வீதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்கள். அங்கு பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.