சேலம்: சிறந்த மாநகராட்சி விருது பெற்றதற்கு யார் காரணம்? தி.மு.க, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்
சிறந்த மாநகராட்சி விருது பெற்றதற்கு யார் காரணம்? என்பதில் தி.மு.க, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ராமச்சந்திரன் சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இந்த விருது பெற உறுதுணையாக இருந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, கொறடா செல்வராஜ் ஆகியோர் சேலம் மாநகராட்சிக்கு சிறந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் இந்த விருது கிடைக்க முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பங்களிப்பு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் தான் விருது கிடைத்தது என்று கூறினர்.
அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த முடியாத நிலை இருந்தது என்று கூறினர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்களால் தான் சேலம் சிறந்த மாநகராட்சி விருது பெற்றது என்று கூறினர். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் மூலம் தான் விருது கிடைத்தது என்று கூறினர்.
இதனால் சிறந்த மாநகராட்சி விருது பெற்றதற்கு யார் காரணம்? என்பதில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.