தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சிகளில் தமிழகத்திற்கு காவிரி உரிமை கிடைக்கவில்லை- பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
தி.மு.க.- அ.தி.மு.க. ஆட்சிகளில் தமிழகத்திற்கு காவிரி உரிமை கிடைக்கவில்லை என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் திடீர் சோதனை செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு பின்னர் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சோதனைக்குப் பிறகு என்ன நடைபெறுகிறது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. கூட்டணியின் நிலைப்பாடு குறித்து, ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்.
பட்டாசு வெடி விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனை தருவதாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். உரிய அதிகாரிகளை நியமித்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.
காவிரி நீர் உரிமை
காவிரி விவகாரத்தில், தி.மு.க.- அ.தி.மு.க. என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்காமல் இருக்கிறது. தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவானது. அவர்கள் எல்லைக்குள் இருந்து வருவதால் கர்நாடகத்துக்கு மட்டும்தான் சொந்தம் என கூறுவது ஏற்கக்கூடியதல்ல.
மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
ஆசிரியர்கள், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது அரசின் கடமை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் வருகின்றன. தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறிய முதல்-அமைச்சர், இப்போது தகுதி அடிப்படையில் உரிமைத்தொகையை வழங்குவது பெண்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பணம் பெறாதவர்கள், தகுதி இல்லாதவர்களா? என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.