தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 12:45 AM IST (Updated: 1 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதம்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஸ்ரீதேவி, துணை தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க தொடங்கியதும், தி.மு.க. கவுன்சிலர் பெருமாள் எழுந்து தீர்மானங்கள் 'ஆல் பாஸ்' என்று கூறினார். உடனே இதற்கு எதற்கு கூட்டம் நடத்த வேண்டும், மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்குதான் இங்கு வந்து உள்ளோம் என்று அ.தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா கூறினார்.

இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து நின்று அ.தி.மு.க. ஆட்சியிலும் இதுபோன்று தீர்மானங்களை 'ஆல் பாஸ்' என கவுன்சிலர்கள் கூறி உள்ளனர் என்று தெரிவித்தனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கூச்சல், குழப்பம் ஆனது. உடனே கவுன்சிலர்கள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும் என்று தலைவர் கூறினார். இதையடுத்து கவுன்சிலர்கள் அமைதி காத்தனர். பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

அ.தி.மு.க. வார்டு புறக்கணிப்பு

கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா(அ.தி.மு.க.): எனது வார்டில் சாக்கடை கால்வாய் தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் பணிகளை சரிவர செய்யாமல் சென்று விட்டனர். அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதால் எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது.

கவுன்சிலர் வசந்த் (அ.தி.மு.க.): எனது வார்டில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே நகராட்சி தலைவர் எனது வார்டை வந்து பார்த்து அடிப்படை பிரச்சினைகளை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும். உப்பு தண்ணீர் வசதிக்கு சப்ஜெட் வைத்த பிறகும், பணிகள் தொடங்கவில்லை.

குறைதீர்க்கும் முகாம்

கவுன்சிலர் துரைபாய்(ம.தி.மு.க.): கூட்டத்தில் மெஜாரிட்டி இருப்பதால் தீர்மானங்கள் 'ஆல் பாஸ்' செய்யப்படுகிறது. ஆனால் பேசுவதற்கு அனுமதி இல்லை என்று யாரும் கூறவில்லை. ஜமாபந்தி நடப்பது போன்று நகராட்சியிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தி.மு.க. ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த வார்டையும் புறக்கணிக்காமல் மக்களுக்கு பணிகள் செய்து வருகிறோம். தற்போது வரி வசூல் செய்யப்பட்ட பிறகு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. நகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றார்.


Next Story