குளித்தலை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
குளித்தலை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குளித்தலை நகராட்சி கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணேசன், ஆணையர் சுப்புராம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கிய போது பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நகராட்சியில் பணிபுரியும் ஒரு சில அதிகாரிகள் பொதுமக்களின் எந்த விதமான அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவித்து நகர்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் நகராட்சி பொறியாளர் ராதாவை தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் சந்தித்து நகராட்சி வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை அந்த வார்டு கவுன்சிலருக்கு ஏன் தெரிவிக்கவில்லை என கேட்டதாகவும் அதற்கு பொறியாளர் ராதா கவுன்சிலர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்தாராம். இதையடுத்து நகராட்சி அலுவலகவளாகத்தில் ஒன்று கூடிய தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி பொறியாளர் ராதாவை வரவழைத்து அவரிடம் இது தொடர்பாக பேசினர். அப்போது கவுன்சிலர்களுக்கும், நகராட்சி பொறியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கவுன்சிலர்களிடம் அநாகரியமாக நடந்து கொண்ட நகராட்சி பொறியாளர் ராதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா மற்றும் நகராட்சி மேலாளர் சண்முகராஜாவிடம் கவுன்சிலர்கள் புகார் மனு அளித்துவிட்டு இது தொடர்பாக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கத்தை சந்திப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.