இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 26 Nov 2022 3:11 PM IST (Updated: 26 Nov 2022 3:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த திமுக நிர்வாகி தங்கவேலு மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 85). இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் தி.மு.க. மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கேனில் கொண்டுவந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த விவசாயி தங்கவேலின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

சேலம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story