கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தை திமுக அரசு 2 ஆண்டுகளாக முடக்கி உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு


கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தை திமுக அரசு 2 ஆண்டுகளாக முடக்கி உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு
x

மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்புடன் செயல்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக முடக்கி உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக, மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்துடன் இணைந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 தவணைகளாக ரூ.14 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவியில் 60 சதவீதம் மத்திய அரசு நிதியாகும்.

கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அரசு, இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, பல்வேறு காரணங்கள் கூறி, கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது. தி.மு.க. அரசின் இந்த மெத்தனப் போக்கை, தமிழக பா.ஜ.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள். பட்டியல் பிரிவு மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய பல ஆயிரம் கோடி நிதியைப் பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பினார்கள். தமிழகப் பள்ளி மாணவர்களைத் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பாமல், அவர்கள் வாய்ப்புக்களைப் பறித்தார்கள்.

அரசு மாணவர் விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் புறக்கணித்திருக்கிறார்கள். தற்போது, கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும், கடந்த 2 ஆண்டுகளாக முடக்கி இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசு ஓதுக்கும் நிதி, நம் சகோதரிகளுக்குச் சென்று கிடைக்கவில்லை என்றால், இந்த நிதி எங்கே செல்கிறது?.

கர்ப்பிணிப் பெண்களை அலைக்கழிக்கும் மெத்தனப் போக்கை தி.மு.க. அரசு விட்டு விட்டு, உடனடியாக அவர்களுக்கான நல நிதியை வழங்க வேண்டும் என்றும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடக் கூடாது என்றும் தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story