தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது- சிவகிரியில் அண்ணாமலை பேச்சு


தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது- சிவகிரியில் அண்ணாமலை பேச்சு
x

தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று சிவகிரியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

ஈரோடு

சிவகிரி

தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று சிவகிரியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

நடைபயணம்

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" நடைபயணம் செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று மாலை 5 மணி அளவில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரி வந்தார். அரசு ஆஸ்பத்திரி அருகே காரில் வந்து இறங்கிய அவர் அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கினார்.

வரவேற்பு

சிவகிரி அரசு மேல்நிலைப்பள்ளி, தியாகி தீரன் சின்னமலை சிலை வழியாக நடந்து தேர் வீதி வந்தார். அப்போது வழி நெடுகிலும் நின்ற பா.ஜனதா கட்சியினர் தாரை தப்பட்டை முழங்க மயில் ஆட்டம், ஒயில் ஆட்டத்துடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து அங்கிருந்து தெற்கு ரத வீதி, புதிய பஸ் நிலையம் வழியாக தியாகி திருப்பூர் குமரன் சிலை பகுதிக்கு அண்ணாமலை வந்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

தொகுதிக்கு வர காரணம்

"என் மண் என் மக்கள்" நடைபயணத்தில் 83-வது தொகுதியாக மொடக்குறிச்சி தொகுதிக்கு வந்துள்ளேன். இந்த தொகுதி நான் வர முக்கிய காரணம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மொடக்குறிச்சியில் நிச்சயமாக தாமரை மலராது என்று அடித்து சத்தியம் செய்தார்கள். ஆனால் மக்களாகிய நீங்கள் தாமரையை மலர வைத்து இந்த தொகுதியில் பா.ஜனதா கட்சியை வெற்றி பெற வைத்து டாக்டர் சரஸ்வதிைய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தீர்கள். அதனால் தான் இந்த தொகுதிக்கு நான் வந்துள்ளேன். இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தொகுதி.

சிறப்பு

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரியில் என் மண், என் மக்கள் நடைபயணம் நடந்து கொண்டிருக்கிறது. எங்கேயும் இல்லாத சிறப்பு இந்த தொகுதிக்கு உள்ளது. இந்தியாவின் முதல் இசை கல்வெட்டை அறச்சலூரில் கண்டுபிடித்த புலவர் ராசு பிறந்த மண்.

இந்தியாவில் முதன்முதலாக சினிமா பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்து மேல் சபை உறுப்பினராக பதவி வகித்த கே.பி.சுந்தராம்பாள் பிறந்ததும், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் அமைந்திட காரணமாக இருந்த ஈரோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈஸ்வரன் பிறந்ததும் இங்குதான்.

தி.மு.க. அரசு

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் உறுதுணையாக இருக்கிறார். ஆனால் தி.மு.க. அரசு விவசாயி மற்றும் நெசவாளர்களுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து விவசாயம் நலிவடைந்து வருகிறது.

காமராஜர் ஆட்சியின் போது பாசன அடிப்படையில் இந்தியாவில் 3-வது மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எதற்காக நான் இதை இங்கு சொல்கிறேன் என்றால் விவசாயத்துக்கு பெயர் பெற்ற ஊர் மொடக்குறிச்சி.

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

ரேஷன் கடைகளுக்கு வரக்கூடிய அரிசியை மத்திய அரசு ரூ.34-க்கு கொள்முதல் செய்து மாநில அரசுக்கு ரூ.32-க்கு வழங்குகிறது. மாநில அரசு கிலோவுக்கு 2 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி திறப்போம் என்று கூறினார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை நெசவாளர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. எனவே வருகிற 2024-ம் ஆண்டு நடக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

நடைபயணத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையுடன் சரஸ்வதி எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன், தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலை பெருந்துறையில் நடைபயணம் மேற்கொண்டார்.


Next Story