கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது


கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கோயம்புத்தூர்

கோவை

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கோவை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கொடிசியாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.790.42 கோடி மதிப்பீட்டில் 5,936 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.229.84 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,115 பணிகளை திறந்து வைத்தார். இது தவிர பல்வேறு துறை சார்பில் 25 ஆயிரத்து 42 பேருக்கு ரூ.368.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

இலவச மின் இணைப்பு

கோவையில் நடைபெறும் இந்த விழா மாநாடு போல் நடைபெறுகிறது. குறுகிய காலத்தில் இந்த விழாவை சிறப்பாக நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அரசு நிர்வாகம் கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல் இழந்து இருந்தது. தற்போது அதற்கும் சேர்த்து செயல்படும் அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இதுவரை கோவை மாவட்டத்தில் 1.57 லட்சம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு தீர்வு கண்டு இருக்கிறார். அ.தி.முக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 2.20 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சியில் கடந்த 1½ ஆண்டுகளில் 1½ லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் ஒரு தி.மு.க எம்.எல்.ஏ. கூட இல்லையே என்று எல்லோரும் நினைத்தோம். கோவையை இந்த அரசு புறக்கணித்துவிடும் என்றும் பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் பொய் என்று சொல்லும் அளவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நிரூபித்துள்ளனர்.

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றது முதல் கோவையில் 3 அரசு நலத்திட்ட விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் ரூ.1,089 கோடியில் 1,413 முடிவுற்ற பணிகளும், ரூ.1,540 கோடியில் 6,800 புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு ரூ.1,600 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிக நலத்திட்டங்கள் பெற்ற மாவட்டம் கோவை மாவட்டம். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. இங்கு செய்துள்ள சாதனைகளை பட்டியலிடுகிறேன்.

மேற்கு புறவழிச்சாலை

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,200 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2,452 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 63 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 13,885 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.8.62 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 510 பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் ரத்து மூலம் 42 ஆயிரம் நபர்களுக்கு 200 கோடி ரூபாய் தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.3,300 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி சாலை பணிகளுக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 155 கோடி ரூபாய் ஒதுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேற்கு புறவழிச்சாலை சாலை அமைக்க இதுவரை ரூ.104 கோடி நில இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. விமான நிலை நில எடுப்பு பணிக்காக இதுவரை ரூ.1,084 கோடி வழங்கப்பட்டுள்ளது.

செல்லப்பிள்ளை

எதிர்க்கட்சியாக இருந்தாலும், பா.ஜ.க.வாக இருந்தாலும், வாட்ஸ்-அப்பில் பொய் செய்தி பரப்புவராக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த அரசு உள்ளது. அவர்களின் பொய் பிரசாரங்களை முறியடித்து கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது. கோவை மாவட்டத்திற்கு மட்டும் இவ்வளவு நலத்திட்டம் என்றால் மாநிலம் முழுவதும் எவ்வளவு நலத்திட்டங்களை இந்த அரசு செய்து இருக்கும். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர்கள் காதுகளில் இந்த திட்டங்கள் சென்றடைய வேண்டும். சென்னைக்கு அடுத்த இடம் கோவை என்றார்கள். சென்னைக்கு சமமாக அல்லது சென்னையை விட உயர்வாக கோவையை செந்தில் பாலாஜி உயர்த்துவார்.

கலைஞரின் பேரன், முதல்வரின் மகன், அமைச்சர் என எத்தனை பெருமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதைதான் பெருமையாக கருதுகின்றேன். பொறுப்பான செல்ல பிள்ளையாக இருப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், எம்.பி.க்கள் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பைந்தமிழ்பாரி, மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன், செந்தில் பி.கார்த்திகேயன், ப.ஆனந்தகுமார், சரத் விக்னேஷ், அசோக்பாபு ஆறுக்குட்டி, கோட்டை அப்பாஸ், வி.கே.சாமிநாதன், ரகுதுரைராஜ், சக்திவேல், கார்த்திக் செல்வராஜ், வக்கீல் அருள்மொழி, சாமிபையன், எம்.சம்பத்குமார், மரியராஜ், டி.தன்ராஜ், சே.குமார், சீனிவாசன், தாரணி, சுந்தரம், கோபால்சாமி, ஆர்.கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story