நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. இடையேதான் போட்டி -அண்ணாமலை பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. இடையேதான் போட்டி -அண்ணாமலை பேச்சு
x

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் போட்டி என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, "கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள் தேர்தலில் மக்கள் நம்மை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் நமக்கு ஆதரவு தருவார்கள். நம்மை பொறுத்தவரை தி.மு.க. தான் நமக்கு எதிரி. தி.மு.க. தான் நமக்கு போட்டி. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி தான் வெற்றி பெறும். மோடிக்கு என்று தனி சிறப்பான பெயரும், நம்பிக்கையும் உள்ளது. அந்த பெயரை வைத்தே நாம் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "சர்க்கஸில் தலைகீழாக தொங்கிக்கொண்டு பாரில் ஆடும்போது ஒரு கம்பியில் இருந்து மற்றொரு கம்பிக்கு தாவும் நேரத்தில் ஒரு திரில் இருக்கும். அதேபோன்று நாமும் கூட்டணி விவகாரத்தில் ரிஸ்க் எடுப்போம். மக்கள் நமக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்

கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து பெரிய அளவில் எம்.பி.க்களை அனுப்பி வைக்க உள்ளோம். மற்றபடி கூட்டணி பற்றியோ, கூட்டத்தில் பேசியது பற்றியும் பத்திரிகையாளர்களிடம் கருத்து கூறுவதற்கு இல்லை.

பா.ஜ.க.வை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதானப்படுத்தி செல்கிறோம். 2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காட்டும். அதற்கான அறிகுறிகள் தேர்தலுக்கு முன்பே உங்களுக்கு தெரியும். 2024 தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதத்தை பார்க்கும்போது அந்த மாற்றம் தெரியும்.

தி.மு.க.வுக்கு சவால்

கூட்டணியில் ஒரு கட்சி (அ.தி.மு.க.) இருக்கிறது என்பதற்காக சந்தோஷப்பட்டதும் கிடையாது. கூட்டணியில் இருந்து போனார்கள் என்பதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. பா.ஜ.க. வலிமை அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாகவும், தலைவர்களின் நோக்கமாகவும், தொண்டர்களின் நோக்கமாகவும் இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். அவர் 3-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.

தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் தான் போட்டி. தி.மு.க. இங்கு ஆளும் கட்சியாக இருக்கிறது பா.ஜ.க. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் 2 பேருக்கும் தான். இதை நான் 2 ஆண்டுகளாக கூறி வருகிறேன். தி.மு.க.வா?, பா.ஜ.க.வா? என சவால் விடுகிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் இதை பார்த்து விடலாம். 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை நாங்கள் மக்கள் முன்பு வைப்போம். தி.மு.க.வின் 35 மாத கால ஆட்சியை மக்கள் மதிப்பிடுவார்கள். அதனால்தான் கூறுகிறேன். தமிழகத்தில் பா.ஜ.க.வா, தி.மு.க.வா என்பதுதான் சவால்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சரஸ்வதி எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் சசிகலா புஷ்பா, டாக்டர் மைத்ரேயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story