எல்லோரின் குரலுக்கும் பதில் அளிக்கும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது - கனிமொழி எம்.பி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150-வது ஆண்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 150-வது ஆண்டு மலரை வெளியிட்டனர்.
அதன் பின்னர் பேசிய கனிமொழி எம்.பி. கூறியதாவது,
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருவது திமுக அரசு. கலைஞர் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதேபோல் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களின் கருத்துகளும், விவசாய கருத்துகளும், தொழிலாளர்கள் கருத்துகளும், அடிமட்ட மக்களின் கருத்துகளையும் கேட்டு செயல்படுத்தக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு. எல்லோரின் குரலுக்கும் பதில் அளிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்போது தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் நிறைவு பெறும்போது விவசாயிகள், விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை செய்து கொடுக்க காத்திருக்கும் அரசு தான் திமுக அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.