ரெயில் முன் பாய்ந்து தி.மு.க. நிர்வாகி தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து தி.மு.க. நிர்வாகி தற்கொலை
x

வறுமை வாட்டியதால், ரெயில் முன் பாய்ந்து தி.மு.க. நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

தி.மு.க. நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோதைமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாள பகுதியில் நேற்று உடல் துண்டான நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பழனி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் பழனி காமராஜர் வீதியை சேர்ந்த ராஜாமுகமது (வயது 57) என்பது தெரியவந்தது.

ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

மாற்றுத்திறனாளியான இவர், தி.மு.க.வில் விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். அவருடைய மனைவி ஜாபர்நிஷா (54), மகள் மும்தாஜ் (29) ஆகியோர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதி அடைந்து வருகின்றனர்.

போதிய வருமானம் இல்லாததால் மனைவி, மகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நிதிஉதவி இன்றி அவர் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இதற்காக நேற்று காலை, கோதைமங்கலம் ரெயில்வே கேட் பகுதிக்கு அவர் வந்தார். அந்த சமயத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த 'அமிர்தா' எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ராஜாமுகமது தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வறுமை காரணமாக தி.மு.க. நிர்வாகி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story