திமுக தலைவர் பதவி: மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - ஏராளமானோர் விருப்பமனு தாக்கல்


திமுக தலைவர் பதவி: மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - ஏராளமானோர் விருப்பமனு தாக்கல்
x
தினத்தந்தி 7 Oct 2022 6:10 AM GMT (Updated: 7 Oct 2022 7:04 AM GMT)

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமான திமுக நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை,

திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

பேரூராட்சி தொடங்கி மாவட்ட செயலாளர் பதவி வரைக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் அடுத்ததாக உயர்பதவியாக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் நடத்தப்படும் என திமுக தலைமை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தலைவர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலுருமிருந்து திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து ஏராளமான விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதேபோல பொதுச்செயலாளராக துரை முருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட வேண்டுமென்று விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 5-ம் ஆண்டில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் 2-வது முறையாக அவர் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story