இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு


இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு
x

இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த தி.மு.க., தற்போது இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி, நெசவாளர்களை வஞ்சிக்க எண்ணுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 3 மாதங்கள் தாமதமாக, அக்டோபர் மாதம்தான் அரசாணை வெளியானது. அத்துடன், அரசு வழங்கிய நூல் தரம் குறைவாக இருந்ததால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக, டிசம்பர் மாத இறுதியில் 80 சதவீத அளவுக்கு விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி பணிகள் முடிந்திருக்கும். ஆனால், தற்போது சேலை உற்பத்தி 42 சதவீதமும், வேட்டி உற்பத்தி 29 சதவீதமும் மட்டுமே முடிவடைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், மொத்த உற்பத்தியையும் நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் அச்சப்படுகின்றனர். ஏழை-எளிய மக்களும், நெசவாளர்களும் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தி.மு.க.வுக்கு ஆதரவான தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும்படி மடைமாற்றம் செய்யப்படுகிறதோ என்று எண்ணும்படி தி.மு.க. அரசு நடந்துகொள்கிறது.

இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவித்த ரூ.487 கோடியே 92 லட்சத்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தால், அதைப் பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க. சும்மா இருக்காது என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story