சமூகத்தில் மற்றவர்களை போன்றுதிருநங்கைகளும் கண்ணியமாக வாழ தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்விழுப்புரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சமூகத்தில் மற்றவர்களை போன்றுதிருநங்கைகளும் கண்ணியமாக வாழ தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்விழுப்புரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:45 PM GMT)

சமூகத்தில் மற்றவர்களை போன்று திருநங்கைகளும் கண்ணியமாக வாழ தி.மு.க. எப்போதும் துணை நிற்கும் என்று விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்


விழுப்புரத்தில் நேற்று 2023-ம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கூவாகம் நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இல்லாமல், நாடுமுழுவதும் உள்ள திருநங்கைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டுகிற மேடையாக அமைந்துள்ளது.

கடந்த ஆட்சியில் நடந்த நிகழ்ச்சியில் இதே போன்று ஒரே மேடையில் இத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டார்களா? என்று கேட்டால் நிச்சயம் இருக்காது. ஆனால், நாங்கள் வந்துள்ளோம். ஏனெனில் தி.மு.க. எப்போதுமே திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நல வாரியம்

குறிப்பாக கருணாநிதி, இவர்களது நலனுக்காக ஆற்றிய பணிகள் ஏராளம். திருநங்கைகள் என்ற பெயரில் அவர்களை கண்ணியமான முறையில் அழைக்க செய்தவர் கருணாநிதி ஆவார். முன்பெல்லாம் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விண்ணப்பங்களில் ஆண், பெண் என்று தான் இருக்கும். ஆனால் கருணாநிதி ஆட்சியில்தான் திருநங்கைகளுக்கான வாய்ப்பு அளிக்க அதற்கான இடத்தையும் கருணாநிதி ஒதுக்கி தந்தார். 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் திருநங்கைகள் நல வாரியம் அமைத்தவர் கருணாநிதி ஆவார். நலவாரிய அடையாள அட்டை பெறுவதால் பெறுகிற பலன்களை நீங்கள் அறிவீர்கள்.

அ.தி.மு.க. முடக்கியது

ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் செயல்பட வைத்துள்ளார். ஏனெனில் தி.மு.க.வுக்கு திருநங்கைகள் நலனில் எப்போதுமே தனி அக்கறை உண்டு.

கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை திருநங்கைகளுக்கு வழங்கி உள்ளார். அதில் குறிப்பாக தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கட்டணமில்லா பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டது, நலவாரியம் புதுப்பிக்கப்பட்டது.

கன்னி பேச்சாக...

நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றதும், தொகுதியில் திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் எனது தொகுதியில் மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி எது என்றால், வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்ததுதான்.

குறிப்பாக தொகுதியில் உள்ள அத்தனை திருநங்கைகளுக்கும் அடையாள அட்டை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்தோம். எனது பெயரிலான அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி இருக்கிறோம்.

சட்டசபையில் எனது முதல் உரையில், தேர்ந்தெடுத்த முதல் தலைப்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நலவாரியம் குறித்ததுதான். அதுதான் எனது கன்னி பேச்சாக அமைந்திருந்தது.

அப்போது என்னிடம் மாதாந்திர ஓய்வூதிய தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். தற்போது அந்த தொகை ரூ.1000 என்பதில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி தரப்பட்டுள்ளது.

சில மாதங்கள் முன்பு கூட சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 50 திருநங்கைகள் தொழில் வாய்ப்பு பெறுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தர வழிவகை செய்து கொடுத்தோம்.

திருநங்கைகளுக்கு விளையாட்டு போட்டி

நான் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால், விளையாட்டிலும் அவர்கள் சாதிக்கும் விதமாக, அவர்களுக்கான போட்டிகளை நடத்த விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

சமீபத்தில் சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் நடந்தது. இதில் எத்தனை பேர் பங்கேற்றாலும் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் தருவேன் என்றேன். அந்த விவரங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பெற்றுள்ளேன். கண்டிப்பாக நான் சொன்னதை செய்து காட்டுவேன்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

திருநங்கைகள் குறைகளை சரிசெய்ய எனது சட்டமன்ற மற்றும் அமைச்சர் அலுவலகம் எந்த நேரமும் திறந்து இருக்கும். இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் திட்டக்குழுவுக்கு தலைவராக நர்த்தகி நடராஜனை நியமனம் செய்தது தி.மு.க., திருநங்கைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து கங்கா, ரீயா போன்ற கவுன்சிலர்களை உருவாக்கியதும் தி.மு.க.தான்.

உங்களில் இருந்து பலர் எம்.எல்.ஏ., எம்.பி.க்களாக வருவீர்கள் என்று நம்புகிறேன். திருநங்கைகளுக்காக பல்வேறு திட்டங்களை தந்துள்ளது தி.மு.க. ஆகும். நாடாளுமன்றத்தில் முதன் முதலாக திருநங்கைகளின் உரிமைக்கு குரல் கொடுக்கும் விதமாக முதல் தனிநபர் மசோதாவை திருச்சி சிவாதான் முன்வைத்தார். இப்படி பல திட்டங்களை தர உள்ளோம். நீங்கள் சமூகத்தில் மற்றவர்களை போன்று கவுரமாக, கண்ணியமாக வாழ்வதற்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story