'திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்' - ஈரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!


திமுகவின் அடித்தளமே ஈரோடு தான் - ஈரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

ஈரோடு,

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது.

கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார்.

தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் ஆதரவு திரட்டி வந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பத் நகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது ,

கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன்.

திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்றார்.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம் என்றார்.


Next Story