தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமா..? அமைச்சர் பேட்டி


தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமா..? அமைச்சர் பேட்டி
x

சென்னையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது;

தமிழகத்தில் பிரதமர் காப்பீட்டு திட்டம், முதல் அமைச்சர் காப்பீட்டு திட்டம் என இரண்டு திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழக்த்தில் ஏறக்குறைய 1,800 மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியும்,மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து தொடர்ந்து பல மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.

தற்போது சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாகவும், தமிழ்நாட்டில் 300 ஆகவும் உள்ளது. இந்த வைரஸ் வீரியமிக்கதாக இல்லை. தொற்றினால் பாதிக்கப்பட்டோர் சில நாட்களில் குணமடைந்துவிடுகின்றனர். இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்திக்கொள்வது, மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்வதும் தான் இதற்கு சரியான தீர்வு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளோம். பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை. தேவைப்படும் போது அதுகுறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


Next Story