ஓரியூரை உருவாக்கிய மன்னர் யார் தெரியுமா?-தொல்பொருள் ஆய்வாளர் தகவல்
ஓரியூரை உருவாக்கிய மன்னர் யார் தெரியுமா? என தொல்பொருள் ஆய்வாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
தொண்டி,
ஓரியூரை உருவாக்கிய மன்னர் யார் தெரியுமா? என தொல்பொருள் ஆய்வாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
பாண்டியர் கால கல்வெட்டு
திருவாடானை அருகில் ஓரியூர் கீழக்குடியிருப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், ஓரியூர் கண்ணன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் திரிசூலம் பொறித்த சூலக்கற்கள் நடுவது வழக்கம். சேதுபதி மன்னர் கால சூலக்கற்களில் பெரும்பாலும் கல்வெட்டு இருக்கும். ஆனால் பாண்டியர் கால சூலக்கற்களில் கல்வெட்டு இருப்பதில்லை. சூலம் மட்டுமே இருக்கும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலத்தானம்
ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன. எனினும் முயன்று படித்து இதன் முழு தகவலும் அறியப்பட்டது.
ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கி உ என கல்வெட்டு முடிகிறது. கல்வெட்டில் புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் சிவன் கோவிலுக்கு ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடும் உரிமை உலகுய்யவந்த நல்லூரைச் சேர்ந்த நின்ற நிலையன்றாதானான் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓரியூர் கீழக்குடியிருப்பு திருப்புனவாசல் சிவன் கோவிலுக்கு தேவதானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்புனவாசல் ஓரியூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
13-ம் நூற்றாண்டு
கல்வெட்டில் குறிப்பிட்டு உள்ள உலகுய்யவந்தான் என்பது முதலாம் குலோத்துங்க சோழனுடைய சிறப்புப் பெயர். வானவன் மாதேவி என்பவர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவியும், முதலாம் குலோத்துங்க சோழனின் தாய் வழி பாட்டியும் ஆவார். இதில் வானவன் மாதேவி நல்லூர் தற்போதைய ஓரியூர் ஆகும். ஆனால் உலகுய்யவந்த நல்லூர் எங்குள்ளது என அறிய இயலவில்லை. தன் பெயரிலும், தன் பாட்டி பெயரிலும் முதலாம் குலோத்துங்கசோழன் நல்லூர்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது.
ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகளில் இல்லை. இந்த கல்வெட்டு கி.பி.13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.