அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும்


அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும்
x

அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

ஆரம்ப சுகாதார நிலையம்

புதுக்கோட்டை ஏம்பல் சாலையில் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கு அரிமளம், ஒத்தபுளி குடியிருப்பு, ஓணாக்குடி, சீகம்பட்டி, பத்திரம், காமாட்சிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், பொதுமக்கள், வயதானவர்கள், சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளது. மேலும் நோயாளிகளின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை இணைய வழியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான கணினி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒரு நபருக்கு செல்போனில் பதிவு செய்ய குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது.

ேமலும் மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை

அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்:- அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. 5 பேர் இருக்க வேண்டிய நிலையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் காலை 9.45 மணிக்கு பணிக்கு வருவதால் சிகிச்சைக்கு வரும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் அவதி அடைகின்றனர். இதேபோல் 4 நர்சுகள் பணிபுரிய இடத்தில் 2 நர்சுகளே உள்ளனர். அதில் ஒருவர் பயிற்சிக்காக வெளியூர் சென்று விடுகிறார். இதனால் ஒரு நர்சு மட்டுமே பணியில் உள்ளார். அரிமளம் சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் பெயர் மற்றும் செல்போன் எண் கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதனை பதிவு செய்வதற்கு பணியாளர்களும் இல்லை, கணினியும் இல்லை. இதனால் மருத்துவமனை பணியாளர் ஒருவர் தன்னுடைய செல்போன் மூலம் நோயாளிகளின் பெயர் மற்றும் செல்போன் என்னை பதிவேற்றம் செய்கிறார். இதனால் ஒரு நபருக்கு பதிவேற்றம் செய்ய சுமார் 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை ஆகிறது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களுடைய பெயரை பதிவு செய்து சிகிச்சை சீட்டு பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அமைச்சரின் தொகுதியில் நிலவும் அவலத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்

முன்னாள் ராணுவ வீரர் குமார்:- அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிமளத்தில் இரவு நேர 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தீவு போல் காணப்படும் இங்கு இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகள், அவசர மருத்துவ உதவி, விஷக்கடி போன்றவற்றுக்கு சிகிச்சை பெற புதுக்கோட்டை செல்ல வேண்டியிருப்பதால் இரவு நேர ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும். அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை டாக்டர் பணியில் இருக்கிறார். பிறகு யாரும் இருப்பதில்லை. இதேபோல் ஒரு நர்சு மட்டுமே பணியில் உள்ளார். அரிமளம் ஒரு டவுன் பஞ்சாயத்து. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதனைச்சுற்றி 60 கிராமங்கள் உள்ளன. விபத்தில் பாதிக்கப்படுவோர், முதியோர், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இந்த சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர மருத்துவமனை ஆகும். இங்கு புற நோயாளிகள் சீட்டு வழங்குவதற்கு பதிலாக மக்களிடம் நோட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். எனவே பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு இங்கு 24 மணிநேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணிபுரியவும், ஓ.பி. சீட்டு வழங்க கணினி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ உபகரணங்கள் பழுது

எட்டாம் மண்டகப்படி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் மணி:- அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சுகாதார நிலையமாகும். ஆனால் இங்கு அவசர சிகிச்சைக்கு சென்றால் மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன. எனவே வெளியே பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஊழியர்கள் கூறுகிறார்கள். இரவு நேரங்களில் டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றுவது கிடையாது. ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 300 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 60-க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கு காரணம் போதுமான டாக்டர்கள் பணியில் இல்லாததும் முறையான சிகிச்சை அளிக்காததும் தான் காரணம். அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு காலத்தில் பிரசவத்திற்கு பெயர் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தது. தற்போது சுகபிரசவம் என்றால் மட்டுமே இங்கு பார்க்கின்றனர். அறுவை சிகிச்சை என்றால் புதுக்கோட்டைக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுகின்றனர். கர்ப்பிணி பெண்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புவதால் கர்ப்பிணியின் குடும்பத்தினர் பீதியடைகிறார்கள். எனவே வழக்கம்போல் அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து பிரசவமும் பார்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24 மணி நேரமும் சிகிச்சை

வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்:- அரிமளத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் தான் வெட்டுக்காடு கிராமம் உள்ளது. எங்களது கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அனைவருமே அரிமளம் அரசு ஆரம்ப நிலையத்தில் தான் சிகிச்சை பெற வருவோம். இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக தான் மருத்துவமனைக்கு வருவோம். அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு தேவையான ஆம்புலன்ஸ் வசதி இல்லை. இதனால் அருகே உள்ள திருமயம் அல்லது பொன்னமராவதியில் இருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த காலகட்டங்களில் நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைகிறது. அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் சிகிச்சை பிரிவு, சித்தா சிகிச்சை பிரிவு எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக செயல்படுகிறது. அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மக்களும் பயன்படும் வகையில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய அளவில் பொது டாக்டர்களை 3 சுற்றுகளாக நியமனம் செய்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story