டாக்டர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதியம் வழங்கக் கோரி கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
அண்ணாமலைநகர்
தமிழ்நாடு அரசு ஏற்றது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கல்லூரிகளையும், மருத்துவமனையையும் தமிழ்நாடு அரசு ஏற்றது.
இதையடுத்து மேற்படி கல்லூரிகளை கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றம் செய்து அரசு சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இங்கு பணிபுரிந்து வரும் டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் சரிவர ஊதிய வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் போராட்டம் நடத்தி ஊதியம் பெறும் நிலை உள்ளது.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் கடந்த மாத(ஏப்ரல்) ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி கோஷம் எழுப்பினா். அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, மனோகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.